இந்திய இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) சார்பில் நடத்தப்படும் Group D பதவிகளுக்கான தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவிக்கும் போட்டித் தேர்வுகளுக்காக, சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வப் பயிலும் வட்டம் மூலம் தொடர்ந்து இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட TNPSC Group IV தேர்வு முடிவில் இப்பயிற்சி மையத்தில் பயின்ற 9 மாணவர்கள் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிகளில் நியமனம் பெற்றுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற TNPSC Group II A தேர்வில் 3 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர்.
தற்போது RRB சார்பில் Group D பதவிகளுக்கான 22,195 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10ஆம் வகுப்பு அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 01.01.2026 அன்று 18 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் www.rrbchennai.gov.in� என்ற இணையதளம் மூலம் வரும் மார்ச் 2ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
RRB Group D தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்று வருகிறது. இதில் அதிகளவிலான பயிற்சி தேர்வுகள் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் புகைப்படம் மற்றும் சுயவிவரத்துடன் நேரடியாக மையத்தில் கலந்து கொள்ளலாம்.
மேலும், போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் தன்னார்வப் பயிலும் வட்ட நூலகத்தில் மாணவர்களுக்கு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளன. www.tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், மாணவர்கள் இதை பயன்படுத்தி பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
















