Madurai Employment News

Latest Government Jobs , Exams & Education Updates

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிராமிய சுயவேலைவாய்ப்பு மையத்தில் இலவச செல்போன் பழுதுநீக்கம், துரித உணவு தயாரிப்பு பயிற்சி – விண்ணப்பிக்க ஜூலை 28 கடைசி நாள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவசமாக செல்போன் பழுதுநீக்கம் மற்றும் துரித உணவு தயாரிப்பு பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை வருகிற ஜூலை 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று மைய இயக்குநர் விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, ஈஸ்வரி நகர், 4-ஆம் பக்கிரிசாமி பிள்ளை தெருவில் செயல்பட்டு வரும் பயிற்சி மையத்தில், 37 நாட்கள் செல்போன் பழுதுநீக்கம் மற்றும் 12 நாட்கள் துரித உணவு தயாரிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

செல்போன் பழுதுநீக்கப் பயிற்சியில் செல்போன் உதிரிபாகங்கள் பொருத்துதல், சிம் கார்டு தொடர்பான கோளாறுகளை கண்டறிந்து சரிசெய்தல் உள்ளிட்ட தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்படும்.

துரித உணவு தயாரிப்பு பயிற்சியில் உணவு பதப்படுத்தலில் சுகாதாரத்தின் அவசியம், தூய்மையைப் பேணும் முறைகள், பூச்சி கட்டுப்பாடு மற்றும் பல்வேறு துரித உணவுகள் தயாரிக்கும் நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு இருவேளை தேநீர், மதிய உணவு மற்றும் பயிற்சிக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க ஜூலை 28 (செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.