Madurai Employment News

Latest Government Jobs , Exams & Education Updates

ஏப்.30க்குள் எமிஸ் தளத்தில் மாணவர் மதிப்பெண் பதிவேற்றம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு தகவல்களை எமிஸ் (EMIS) தளத்தில் பதிவேற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி இயக்குநர் மற்றும் மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 2025–26 கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் முழு ஆண்டு தேர்வு மதிப்பெண்களை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ஏப்.30க்குள் எமிஸ் தளத்தில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தற்போதைய தேவைகள் தொடர்பான விவரங்களை தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து, “School Infrastructure Details” பகுதியில் ஏப்.30க்குள் பதிவுசெய்ய வேண்டும். இதனை வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து, மாணவர்களின் தேர்ச்சி அறிக்கைக்கு அதே தேதிக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், நடப்பு கல்வியாண்டை முடிக்கும் மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் பதிவிறக்கம் மற்றும் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி வழங்கும் பணிகள் மே 11, 2026 முதல் எமிஸ் தளம் வழியாக தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகளை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும். இதனை வட்டாரக் கல்வி அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.